நாட்டின் பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பரபரப்பாக காணப்படுகின்றன.
டிட்வா புயலால் சேதமடைந்த புகையிரத பாதைகள் மற்றும் வீதி வலையமைப்புகள் மீளமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் திட்டமிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான சுற்றுலா மையங்கள் வெளிநாட்டு பயணிகளால் நிரம்பியுள்ளன.
இதற்கிடையில், சுற்றுலாப் பயணிகளின் அதிக வரவேற்பைப் பெற்ற துன்ஹிந்த நீர்வீழ்ச்சி பகுதியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானதும் சேதமடைந்த நிலையிலிருந்த பார்வை மேடைக்குப் பதிலாக ரூ.200 இலட்சம் செலவில் புதிய பார்வை மையம் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கவுடுல்ல தேசிய வனவிலங்கு பூங்காவில் அதிகளவில் காணப்படும் காட்டு யானைகளைப் பார்வையிடவும், எல்ல மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட தெமோதர சுற்றுலா கிராமத்திற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
