தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி, பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொடாங்கொடை 32.4 கிலோமீற்றர் பகுதிக்கு தொலைவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதோடு, விபத்தின் போது காரில் பயணித்த பெண் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்த வேளையில், வீதி பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த தடைகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலி, பராமரிப்புத் தடைகள் மற்றும் சொகுசு கார் என்பனவற்றிற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
