பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன (பாணந்துறை ‘குடு சலிந்து’) என்பவரின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கவனித்து வந்த பிரதான நபர், அவரது மனைவியுடன் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை தலைமையக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்ன தலைமையிலான குழுவினர் இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் முன்னெடுத்த சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டி ஒன்றை மறித்து பொலிஸார் பரிசோதனை செய்தனர். அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடமிருந்த ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றினர். தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது மனைவியின் பையைச் சோதனையிட்ட போது பெருந்தொகை ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது.
சோதனையின் போது ரொக்கப் பணம் ரூ. 63 இலட்சம் போதைப்பொருள் 15,055 மில்லிகிராம் ஹெரோயின் நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஒரு ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 26 மற்றும் 34 வயதுடைய இத்தம்பதியரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணைகளில் பின்வரும் விவரங்கள் தெரியவந்துள்ளன:
‘குடு சலிந்து’வின் போதைப்பொருள் விநியோகம் மற்றும் பணத்தைச் சேகரிக்கும் பணிகளுக்காக இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,50,000 சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இவர்கள் கடந்த 2 வருடங்களாக பிலியந்தலை – ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர். அவ்வீட்டைப் பரிசோதித்த போதே பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பன மீட்கப்பட்டன.
சந்தேகநபர்களான தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
