சவூதியில் மரண தண்டனை எதிர்நோக்கும் இலங்கையர் – இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கோரிய இலங்கைத் தமிழரசுக் கட்சி
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையரான சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்துள்ளது.
இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் அந்தனி வி. பிர்னோட் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் சார்பில் அவரது வழக்கு தொடர்பான முக்கிய விபரங்களை தூதரக அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
அத்துடன், இராஜதந்திர வழிமுறைகளை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இரு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனோஜனின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது மரண தண்டனையைத் தடுக்க வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து தொடர்புகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
