சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரேரணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சபாநாயகருக்கு எதிரான 46 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்தப் பிரேரணையை முன்வைத்ததுடன், அதற்கு குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அரச வளங்களைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு எதிர்க்கட்சியின் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
