ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மற்றும் சட்டபூர்வமான தொலைபேசி இலக்கத்தை தவறுதலாகச் மோசடி இலக்கங்களின் பட்டியலில் சேர்த்தமை தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
தொலைபேசி செயலி மோசடி தொடர்பாக, கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 011-7771979 என்ற தொலைபேசி இலக்கம் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தது.
011-7771979 என்ற இலக்கம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மற்றும் சட்டபூர்வமான தொடர்பு இலக்கமாகும்.
இதனை மோசடி இலக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விடுத்த கோரிக்கையை அடுத்து, பொலிஸார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மோசடியாளர்கள் ‘WhatsApp’ ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் போலத் தொடர்புகொண்டு, SriLankan.apk என்ற செயலியை நிறுவுமாறு பொதுமக்களைக் கோருகின்றனர்.
இந்த மோசடிச் செயலியைப் பரப்புவதற்கு srilankan[.]wuozgo[.]cc , srilankan[.]vaco[.]cc , srilankan[.]krgo[.]cc என்ற மூன்று போலி இணையதளங்கள் பயன்படுத்தப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் செயலி ஒரு ‘Banking Trojan’ என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை நிறுவுவதன் மூலம், தொலைபேசியை தூரத்தில் இருந்து இயக்கவும் (Remote Access), தனிப்பட்ட தரவுகளைத் திருடவும், வங்கிப் பரிமாற்றங்களைச் சட்டவிரோதமாக மேற்கொள்ளவும் மோசடியாளர்களுக்கு வழிவகுக்கிறது.
மேலும் 077-4558361 , 074-1142208 , 077-5791209 , 074-3268200 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடையவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உடனடி நிதி ஆதாயம் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் இவ்வாறான மோசடிகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும், இவ்வாறான ஏமாற்று வேலைகளில் சிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
