இந்தியாவை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காக கடந்த 2 வருடங்களாக அனுர அரசு சீன ஆராய்ச்சி கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்காதுள்ளது. இலங்கை அரசாங்கம் முழுமையாக இந்தியாவுக்கு அடிபணிந்து செயற்படுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. மக்களின் எண்ணங்களையும், அரசியல் சிந்தனையையும் திசைத்திருப்பும் செயற்பாடுகள் தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
மெட்ரோ பேருந்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. கொழும்பில் மெட்ரோ பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதால் கிராமபுறங்களில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன, விவசாயிகளுக்கு கிடைக்கும் நிவாரணம் என்ன ஒன்றும் இல்லை.
கடந்த அரசாங்கங்களைப் போன்று பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்களை இந்த அரசாங்கம் செய்தால் ஆட்சியாளர்களுக்கு மாரடைப்பு வந்து விடும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்து செயற்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் இந்தியாவின் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஏதும் நாட்டுக்கு வரவில்லை. இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அரசாங்கம் சீனாவை புறக்கணித்துள்ளது.இது நன்றி மறந்த பழக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு சென்றுள்ளார். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கொள்கையை செயற்படுத்தி இந்த நாட்டில் கலவரத்தை தோற்றுவித்தார்கள்.தற்போது இந்தியாவுடன் இணக்கமாக செயற்படுகிறார்கள்.
இலங்கையில் அமுல்படுத்தப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்களை விரைவுப்படுத்துமாறு இந்தியா இலங்கைக்கு தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகிக்கிறது. அரசாங்கமும் அதற்கு ஏற்றாட்போல் செயற்படுகிறது.இதன் விளைவு எதிர்காலத்தில் பாரதூரமாக அமையும் என்றார்.
