விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய, அவர் நாளை (09) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 7ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு இன்று (08) சென்றிருந்தார்.
மேலும், ஷிரந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள முன்பிணை மனு எதிர்வரும் 12ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
