கச்சத்தீவு மற்றும் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பில் இந்திய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இருவர், கச்சத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவு மாத்திரமன்றி, அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்பும் இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்திய நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இழுவைமடி படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பிலும் நீதிமன்றம் தனது கருத்துகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்பில் கடல் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மீனவர்களுக்கு மீன்பிடியில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே சில இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்பரப்பின் கடல் வளங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது எனவும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கச்சத்தீவு மற்றும் இலங்கை கடற்பரப்பு தொடர்பான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை மற்றும் மீன்பிடி உரிமைகள் தொடர்பான நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
