கலகொடஅத்தே ஞானசார தேரரை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர், தமது மகா சங்க சபையுடன் கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திகதியொன்றையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகா விஹாரவம்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் பிரதான பதிவாளரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியருமான கோட்டபிட்டியே ராகுல அனுநாயக்க மகாநாயக்க தேரர், நேற்று (09) ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஞானசார தேரர் காவி ஆடை அணியாமல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், அவரைச் சேர்ந்த மகா சங்க சபைக்கே ஆடை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது சபையின் பிரதிநிதிகளை அழைக்காமல் நடத்தப்பட்ட கலந்துரையாடல் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சினை பௌத்த சமூகத்தையும் ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் உரிய அமைச்சர்களையும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தையும் பங்கேற்கச் செய்யுமாறும் அவர் கோரியுள்ளார்.
