பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளனர். பௌத்த கலாசாரத்தையும் தான தர்மப் பாரம்பரியத்தையும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கான மிகப்பெரிய சான்று இதுவாகும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவித்தல் விடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று 20 கிலோகிராம் அரிசியைக் கூட கடன் அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை நாட்டில் காணப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்குக்கூட சம்பளக் கழிப்பு முறையில் அரிசி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், அந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளனர்.
பௌத்த கலாசாரத்தையும் தான தர்மப் பாரம்பரியத்தையும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கான மிகப்பெரிய சான்று இதுவாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மிஹிந்தலை புனித பூமிக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்காக இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்கள் தமது பொருளாதார சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தான தர்மப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிஹிந்தலை புனித பூமியுடனும் பௌத்த பாரம்பரியத்துடனும் மக்களுக்கு உள்ள ஆழமான பற்றையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.
மிஹிந்து தேரருக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்துடனேயே இந்த மாபெரும் மக்கள் திரள் இங்கு ஒன்று கூடியுள்ளது
மிஹிந்தலை பொசோன் வாரத்தின் போது விகாரையை அண்மித்த பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், நீராடும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மையமாகக் கொண்டு பக்தர்களிடம் சிலர் சட்டவிரோதமாக பணம் அறவிட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அத்தகைய நபர்களுக்கு ஒரு சதம்கூட வழங்க வேண்டாம்.
உள்ளூராட்சி மன்றங்களால் சட்டபூர்வமாக அறவிடப்படும் சேவைக் கட்டணங்களைத் தவிர வேறு எவருக்கும் பணம் வழங்க வேண்டியதில்லை. ஏதேனும் கட்டணம் செலுத்த நேர்ந்தால் கட்டாயமாக பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச்சீட்டு இன்றி எந்தவித பணமும் வழங்கக் கூடாது. யாரேனும் சட்டவிரோதமாக பணம் கோரினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இயன்றால் அவர்களின் புகைப்படத்தை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கவும்.
மேலும், மிஹிந்தலைக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் 7 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொசோன் வாரத்தின் முழு காலப்பகுதியிலும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
