தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள இரண்டு பெண் வரிக்குதிரைகளில் ஒன்றுக்கு செரிமான மண்டலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
குறித்த வரிக்குதிரை கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி முதல் நோய்வாய்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வரிக்குதிரையிடமிருந்து சேகரிக்கப்பட்ட உடற்கூற்று மாதிரிகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை மூலம் அதன் செரிமான மண்டலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இது தொடர்பில் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ச கூறுகையில்,
மிருகக்காட்சிசாலையின் விலங்கு வைத்தியர்கள் வரிக்குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்த போதிலும், அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், இதனைத் தொடர்ந்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் மூத்த விரிவுரையாளரும், குதிரை இனங்களில் நிபுணத்துவம் பெற்றவருமான வைத்தியர் தம்மிக பெரேராவால் கடந்த 8ஆம் திகதி இந்த வரிக்குதிரை பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த பரிசோதனைகளின் பின்னர், மருந்தினால் மாத்திரம் தடையை நீக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து, நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கால்நடை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்துள்ளனர்.
நிபுணத்துவ கால்நடை வைத்தியர்களின் ஆலோசனையின்படி, மேலதிக சிகிச்சைகளும் பராமரிப்புகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், வரிக்குதிரையின் உடல்நிலை குறித்த மேலதிக விபரங்கள் அவசியத்துக்கேற்ப வெளியிடப்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
