சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை இன்று (14) பிறப்பித்துள்ளார். மேலும், சர்வதேச காவல்துறையின் ஊடாக அவரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், சர்வதேச சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்காக சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணையைப் பிறப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு தொடர்பில் குற்றச்சாட்டு
கடந்த 2014ஆம் ஆண்டு, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி, ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு 12,000 டி-சேர்ட்டுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கும், சர்வதேச ரீதியில் அவரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
