இலங்கையின் மிக உயரமான மற்றும் பெரிய தந்தங்களைக் கொண்ட யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரபல காட்டு யானையான ‘கவன் திஸ்ஸ’ (Kavantissa) உயிரிழந்துள்ளது.
கல்கமுவ – சியம்பலங்கமுவ பகுதியில் நேற்று (16) காலை உடல்நலக் குறைவால் கீழே விழுந்த நிலையில் இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானையின் முன்புற வலது காலில் ஏற்பட்ட காயத்திற்காக கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி முதல் கால்நடை மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தக் காயம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிகிச்சையின் மூலம் காலில் ஏற்பட்ட காயம் ஓரளவு குணமடைந்து வந்தபோதிலும், கடந்த சில நாட்களாக யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, உணவு உட்கொள்வதைத் தவிர்த்தமை அதன் உடல்நிலை குறித்த கவலையை அதிகரித்திருந்தது.
இந்நிலையில்,நேற்று மாலை 6.18 மணியளவில் சிகிச்சை பெற்று வந்தபோது கவன் திஸ்ஸ உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக இன்று (17) கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்கமுவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடமாடி வந்த கவன்திஸ்ஸ, இலங்கையின் முக்கியமான காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்டதுடன், அதன் பிரம்மாண்டமான தோற்றத்தாலும் நீண்ட தந்தங்களாலும் பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
