இலங்கையில் 06 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான அல்லது அரை நிரந்தர வீடுகள் இல்லையென வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்ஹ விசனம் வெளியிட்டுள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு புதன்கிழமை (30) வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2024 டிசெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் 61 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால், சுமார் 60 இலட்சம் வீட்டு அலகுகளே உள்ளன.
இந்த கணக்கெடுப்பை கூட சரியாக மேற்கொள்வது கடினமாக இருந்தது. சில குடும்பங்களுக்கு இரண்டு வீடுகள் வரை இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில வீடுகள் மக்கள் வசிப்பதற்கு பொருத்தமான நிலையில் இல்லை. எனவே, வீடுகளின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்து நாட்டின் உண்மையான வீடமைப்பு நிலைமையை தீர்மானிக்க முடியாது. இலங்கையில் 6 இலட்சம் மக்களுக்கு இன்னமும் பாதுகாப்பான அல்லது அரை நிரந்தர வீடுகள் இல்லை.
இந்த வீடமைப்பு நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் 31,000 வீடுகளை உள்ளடக்கிய விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் முதலாவது கட்டத்தின் கீழ் 19,000 வீடுகளை புதிதாக நிர்மாணிப்பதற்கும், தற்போது உள்ள வீடுகளை மீளமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த 19,000 வீடுகளில் சுமார் 12,000 வீடுகளை அரசாங்கத்தின் முழுமையான உதவியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கவுள்ளோம். எஞ்சிய வீடுகளை சலுகை கடன் உதவியின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது 20,000 வீடுகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டவையாகும். அவற்றில் சிலவற்றின் பணிகளை நாம் நிறைவு செய்துள்ளோம். மேலும் சில வீடுகளின் பணிகள் அடுத்த வருடத்தளவில் நிறைவடையும். இந்த வருடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு மேலதிகமாக, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் வீடமைப்புக் கடனை பெற்றுக்கொள்வதற்கு நாம் சலுகையொன்றை வழங்கியுள்ளோம். அதேபோன்று வெளிநாடுகளில் பணியாற்றும் மக்களுக்கு வீடமைப்பு சலுகைக் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளோம்.
அந்த வேலைத்திட்டங்களையும் இந்த 31,000 வீடுகளுக்குள் நாம் உள்ளடக்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது பெருமளவிலான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் 5ஆம் திகதியளவில் 5,000க்கும் அதிகமான வீடுகளை திறந்து வைக்க நாம் எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
