இலங்கையில் இன்று (17) காலை ஏற்பட்ட மின்சாரக் கட்டமைப்பின் செயலிழப்பைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இந்தத் தடைக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தின் ஓர் அலகில் ஏற்பட்ட கோளாறும் சாத்தியமான காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மின்வெட்டுக்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சாரக் கட்டமைப்பை மீளச் சீரமைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மறு அறிவித்தல் வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்தகட்டு அமைப்புகளைத் துண்டிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
