மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா, கணக்குப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளார். வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 147 பேர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி கல்லடி பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த 19 வயது யுவதியை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஒக்டோபர் 15ஆம் திகதி சித்தாண்டியில் 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
