நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் அம்பாறை மாவட்டத்திலும் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விற்பனை முகவர்களிடம் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, லாஃப் மற்றும் லிட்ரோ ஆகிய இரு வகை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு முன்பாகப் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் எரிவாயுத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் சில நுகர்வோர் முன்கூட்டியே சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முயற்சிப்பதால், விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
எனினும், நீண்ட நேரம் காத்திருந்தும் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் காணப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
விநியோகம் குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருப்பதால், அத்தியாவசியத் தேவைக்கான சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், கடந்த சில நாட்களாக நகர்ப்புறங்களில் உள்ள பல விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாகத் தீர்ந்துள்ளதாகவும், நிறுவனங்களிலிருந்து சிலிண்டர்களை ஏற்றிவரும் லொறிகள் உரிய நேரத்தில் வராததே இதற்குக் காரணம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழமையைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர். சில பகுதிகளில் விநியோகம் தாமதமடைந்துள்ளதுடன், மேலும் சில இடங்களில் விநியோகம் இடம்பெறாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டை விரைவாகச் சீர்செய்து, சீரான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.
