எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் மஹிந்த, நாமல் ஆகியோரின் பெயரை குறிப்பிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திஸாநாயக்க, கபில சந்திரசேனவுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியகடதாசி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா எயார் பஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாராயின் அதற்கு அவரை தூண்டியது யார்? உளவியல் ரீதியில் அவருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தது யார் என்பதை ஆராய வேண்டும்.
எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் 2020.02.13 ஆம் திகதியன்று கபில சந்திரசேனவும், அவரது மனைவியும் முதன் முறையாக கைது செய்யப்படுகிறார்கள். கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க அப்போது பதவி வகித்தார். 2 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டார்கள்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் கைது செய்யப்பட்ட கபில சந்திரசேன உளவியல் ரீதியில் கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது ‘ மஹிந்த மற்றும் நாமல் இந்த மோசடியுடன் தொடர்பு என்று கூற வேண்டும்.
இல்லையேல் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கின் சாட்சியாளர் தூக்கில் தொங்கியதை போன்று தொங்க நேரிடும்’ என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க அழுத்தம் பிரயோகித்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி சமர்ப்பித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியகடதாசி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மக்களின் வரிப்பணத்தில் தான் இயக்கப்படுகிறது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புக்கு அமைய ஆணைக்குழு செயற்பட கூடாது. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. எமது ஆட்சியில் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
