பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் தேவாலயமொன்றுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்குத் தொடர்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025 ஏப்ரல் 24ஆம் திகதி, வேல்ஸின் போர்ட் டால்போட் (Port Talbot) பகுதியில் அமைந்திருந்த பழமையான பெத்தானி ஆங்கில கால்வினிஸ்டிக் மெதடிஸ்ட் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டடம் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பாகிஸ்தான் குடியேறிகள் தேவாலயத்திற்குத் தீ வைத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. மேலும், பிரித்தானியாவில் கிறிஸ்தவ மதம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும் சில பதிவுகள் தெரிவிக்கப்பட்டன.
எனினும், இந்தத் தீ விபத்து தொடர்பாக உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தீவைப்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெற்கு வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பாகிஸ்தானுடன் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பொலிஸார் தெளிவுபடுத்தியதுடன், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
எனவே, இரண்டு பாகிஸ்தான் முஸ்லிம்கள் தேவாலயத்திற்குத் தீ வைத்ததாகவும், இந்தச் சம்பவம் மத அடிப்படையிலான தாக்குதல் என்றும் கூறப்படும் தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை.
