திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக பொலிஸார் ஏன் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், குறித்த அரசியல் பிரதிநிதிகள் எப்போது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளை 27(2)-இன் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கேள்விகளை முன்வைத்தார்.
இதன்போது, நேரடியாகவோ மறைமுகமாகவோ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களைச் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளாக பொலிஸ் திணைக்களம் கருதுகிறதா எனவும் அவர் வினவினார்.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துகளைப் பதிவிடுவோருக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றால், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாததற்கான காரணம் என்ன என்றும், அவர்கள் எப்போது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, இவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அப்பாவித் தமிழ் மக்கள், குறிப்பாக ஆனந்த சுதாகரன் போன்றவர்கள், விசாரணையின்றி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஒரே மாதிரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றும், வடமாகாணத்தில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவர் திருப்தியடைகிறாரா என்றும் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பினார்.
