இலங்கையில் சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்களுக்கு, காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் இலவச இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
‘டேக் ஹார்ட் மெர்சி மிஷன்’ (Take Heart Mercy Mission) அமைப்பின் விசேட மருத்துவர்கள், இலங்கை மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து இந்தச் சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று (22) வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை நடவடிக்கைகளைப் பார்வையிட்டதுடன், சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவையும் ஆய்வு செய்தார்.
இலங்கையில் சிகிச்சையளிப்பது சவாலான சில சிக்கலான இதய நோய்களுக்கு, இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூரிலேயே சிகிச்சை வழங்க முடிவதாக அவர் தெரிவித்தார். மேலும், இத்தகைய சிகிச்சைகள் இலங்கை மருத்துவ நிபுணர்களின் அறிவையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் குறித்த தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொள்வதால், அரசாங்கத்திற்கு நிதிச் சுமை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறவியிலேயே இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் இலங்கைச் சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், கடந்த 23 ஆண்டுகளாக இந்த அமைப்பு இத்தகைய மருத்துவப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
