2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் அடைந்துகொள்ளப்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு சமர்ப்பிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலான அமைச்சுகளின் நிதிச் செலவினங்கள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அரச நிறுவனங்களின் இலாபம், நட்டம் தொடர்பான விபரங்களையும் அவர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த நிதிப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, கேள்விகளுக்கு பதிலளிக்கத் தேவையான கால அவகாசம் அவசியம் எனத் தெரிவித்தார்.
இதன்போது, அடுத்த மாதம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முன்னேற்றங்களை முதலில் வெளிப்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
