லீஹரி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சிவப்பு நட்சத்திரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பை நடிகர் சமுத்திரக்கனி இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் பசியைப் போக்குவதற்காகவே பயன்பட வேண்டும்; அவற்றைப் பணக்காரர்கள் பதுக்கி வைத்து செயற்கையான பஞ்சத்தை உருவாக்குவதற்காக அல்ல என்ற சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.
காதல், புரட்சி, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய அம்சங்களுடன், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும் மனித வாழ்வின் போராட்டங்களையும் இப்படம் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் டல்ஹௌசி பிரபு கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பொன்வண்ணன் சமூக அரசியல் தலைவராகவும், OAK சுந்தர் பொலிஸ் ஆணையாளராகவும், பழ. கருப்பையா நீதிபதியாகவும் நடிக்கின்றனர். மேலும், சித்தார்த், தீரன், பாலமுருகன் மற்றும் டெல்டா வீரா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவை PK மேற்கொள்ள, தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை கனல் கண்ணனும், படத்தொகுப்பை செந்தில் வீராவும் கவனிக்கின்றனர். நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றுகிறார்.
லீஹரி பிக்சர்ஸ் சார்பில் B. சின்னத்தம்பி தயாரிக்கும் இப்படத்திற்கு கர்ணா மற்றும் டாக்டர் தினேஷ் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
‘சிவப்பு நட்சத்திரங்கள்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
