அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாடு இன்று (23) முற்பகல் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

“கடந்த காலத்தைக் கௌரவித்து, நிகழ்காலத்தைப் பலப்படுத்தி, எதிர்காலத்தை வரைபடமாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.

இதன்போது, நாட்டின் அரச பொறிமுறையில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களமும், நூற்றாண்டைப் பூர்த்தி செய்துள்ள அரச நில அளவையாளர் சங்கமும் நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கியுள்ள பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

தொழில்சார் கண்ணியம் மற்றும் சேவைத் தரங்களைப் பாதுகாத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக நில அளவைத் திணைக்களமும் அதன் பணியாளர்களும் ஆற்றிவரும் சேவையின் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய நில அளவைச் சேவையை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் அறிவைப் பயன்படுத்தி முன்னோக்கிச் செல்வதுடன், நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கு வலுவான பங்களிப்பை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
