முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 119 ரோஹிங்கிய அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும், பிறப்புப் பதிவு, சுகாதாரம், மருத்துவச் சேவைகள் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தேசிய தடுப்புப் பொறிமுறையினால் கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி, முல்லைத்தீவு விமானப்படை முகாமில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறித்த முகாமில் கடந்த ஜனவரி 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது 116 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதியன்று அந்த எண்ணிக்கை 119ஆக அதிகரித்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் முகாமில் ஒரு மரணம் நிகழ்ந்ததுடன், நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது முகாமில் 35 ஆண்கள், 24 பெண்கள், 30 ஆண் சிறுவர்கள் மற்றும் 30 பெண் சிறுமிகள் என மொத்தம் 119 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கு உணவு, குடிநீர் மற்றும் தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டாலும், பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அதிக சனநெரிசல், போதிய காற்றோட்டமின்மை, பாலின அடிப்படையில் தனித்தனியான வசதிகள் இல்லாமை, தனியுரிமை பாதிக்கப்படுதல், மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான போக்குவரத்து வசதியின்மை மற்றும் மொழித் தடைகளால் ஏற்படும் தொடர்பாடல் சிக்கல்கள் ஆகியவை முக்கிய குறைபாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், முகாமில் பிறந்த குழந்தைகளுக்கான உத்தியோகபூர்வ பிறப்புப் பதிவு மேற்கொள்ளப்படாமை மற்றும் சுமார் 60 சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகள் இல்லாமை குறித்தும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் அவர்களின் தேசியத்துவம் அல்லது குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையின் கீழ் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற அல்லது அவமானகரமான நடத்தைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய, முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறப்புப் பதிவு மற்றும் பிறப்புச் சான்றிதழ் வழங்குதல், பாலின அடிப்படையிலான பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதிப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், அவசர மருத்துவ உதவிக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் சிறுவர்களுக்கான கல்விச் செயற்றிட்டங்களை ஆரம்பித்தல் ஆகிய நடவடிக்கைகளை உரிய அரச கட்டமைப்புகள் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
