இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி அண்மைக்காலமாக அடைந்துள்ள முன்னேற்றத்தை ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா பாராட்டியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற AFC விசேட மாநாட்டுக்கு இணையாக, AFC தலைவருக்கும் இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
FIFA உலகத் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை, நாட்டின் கால்பந்தாட்ட வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை வெளிப்படுத்துவதாக AFC தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கால்பந்தாட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேசத் தரத்திலான இரண்டு புதிய கால்பந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட உதவிகளுக்காக AFC-க்கு ஜஸ்வர் உமர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய அணியின் சர்வதேசப் போட்டித் திறன், FIFA தரவரிசை முன்னேற்றம், உள்நாட்டுப் போட்டிகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு ஆகிய துறைகளில் இலங்கை கால்பந்தாட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
