வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள இந்த வானிலைத் தொகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து இன்று (26) சூறாவளியாகவும், நாளை (27) தீவிர சூறாவளியாகவும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும்.
வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் உள்ளிட்ட சில பகுதிகளில் மணிக்கு 40–50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் மற்றும் திடீர் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
