அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
12 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கடந்த 23ஆம் திகதி முதல் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக, 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 2,736 குடும்பங்களைச் சேர்ந்த 10,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 182 பேர் தற்போது நான்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- கொழும்பு: ஒரு பாதுகாப்பு மையத்தில் 27 பேர்
- இரத்தினபுரி: இரண்டு பாதுகாப்பு மையங்களில் 33 பேர்
- மன்னார்: ஒரு பாதுகாப்பு மையத்தில் 122 பேர்
அம்பாறை, கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, குருநாகல், மாத்தறை, புத்தளம், இரத்தினபுரி, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
215 வீடுகள் சேதம்; ஒருவர் உயிரிழப்பு
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 215 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, புத்தளம் பகுதியில் 56 வயதுடைய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
30 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 17 பிரதான நீர்த்தேக்கங்களும் 13 நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிங் கங்கை, நில்வலா கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளிலும், அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
இதேவேளை, மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அவதானம்! வெள்ள அபாயம் உள்ள பகுதிகளிலும் ஆற்றங்கரைகள் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களிலும் வசிப்போர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
