சீரற்ற காலநிலை காரணமாக இலங்கைக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் தங்கியுள்ள 25 பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு, பாதுகாப்புக் கருதி இந்தியப் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இலங்கை அரசாங்கம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் தீவிரமடைந்துள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக, கடலில் தங்கியுள்ள இலங்கை மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடற்பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு குறித்த படகுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலில் தங்கியுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
