இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் அலுவலகத்தில் இன்று (27) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான விவகாரங்களும், கிழக்கில் ஷரியா சட்டம் தொடர்பான விடயங்களும் பேசப்படுகின்ற நிலையில், நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்கக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கொள்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, மக்களை அடக்குவதற்குப் பயன்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள் தொடர்பிலும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நடைமுறைகளுக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் தான் செய்த முறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், பௌத்த சாசனம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதை அரசாங்கம் நடைமுறையில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
