இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், களுத்துறை, அம்பாறை, கண்டி, குருநாகல், மாத்தறை, புத்தளம், இரத்தினபுரி, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் பதிவாகியுள்ளது.
மொத்தம் 3,162 குடும்பங்களைச் சேர்ந்த 12,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 304 பேர் எட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்துடன் தொடர்புடைய நீரில் மூழ்கிய சம்பவத்தில் புத்தளம், மாதம்பே பகுதியில் 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
227 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களு கங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றில் சிறிய அளவிலான வெள்ள நிலை பதிவாகியுள்ளதாகவும், சில நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலையை எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வெள்ளநீர் பாயும் வீதிகளைக் கடப்பதைத் தவிர்ப்பதுடன், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
