ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலமானது தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும், குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின்றியும் நபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இச்சட்டமூலம் வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கு அனுமதியளிப்பதன் மூலம் சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் தற்போதுள்ள வடிவில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களினால் ஏற்பட்டதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்
