இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் இன்று (30) காலை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலம் (OCB) ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, இந்தச் சட்டமூலங்கள் ஒட்டுமொத்த நாட்டுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தச் சட்டமூலங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தனிநபர்களைக் குறிவைத்து வகைதொகையின்றி கைது செய்வதற்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளதாக சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
