இந்தியாவின் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசுப் பாடசாலை ஒன்றில், மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் தாக்கியதில் ஆறு வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மழலையர் வகுப்பில் கல்வி பயிலும் சிறுமியை வகுப்பறைக்கு அழைத்துச் சென்ற மாணவன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து மேசையில் தலையை மோதியதுடன், கற்கள் மற்றும் செங்கல் போன்ற பொருட்களாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி ஆரம்பத்தில் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள PGIMER வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஆரம்பத்தில் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், ஒக்டோபர் 31ஆம் திகதி வெளியான தகவலின்படி, அவர் ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பாடசாலையில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுமியின் குடும்பத்தினர் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலை நிர்வாகத்தின் கவனக்குறைவு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஹரியானா அரசு ஐந்து பேர் கொண்ட குழுவொன்றையும் நியமித்துள்ளது.
எட்டு வயதுடைய மாணவர் என்பதால், சிறுவர் நீதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அவரது உளவியல் மற்றும் மருத்துவ மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
