கத்தார் கேஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அல் மயேதா’ (Al Mayeda) என்ற திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் சென்ற கப்பல் மீது வளைகுடா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பஹ்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் கடல்சார் பாதுகாப்பு, கடல் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பஹ்ரைன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இத்தாக்குதல் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான உடன்படிக்கையையும் மீறும் செயல் எனவும் பஹ்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
கத்தாரின் பாதுகாப்பு, தேசிய நலன்கள், கப்பல்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக அந்த நாடு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பஹ்ரைன் தனது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கவும், அவற்றுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் சர்வதேச சமூகம், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பஹ்ரைன் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச கடல் வழிகளில் கப்பல்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமே உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பு, வர்த்தகச் சீரான நிலை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேண முடியும் என்றும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது.
