வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் இந்த ஆண்டுக்குள் விடுவிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (03) நடைபெற்ற அமர்வின்போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்புகள் இடம்பெறுவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் தவறிழைப்பதாகவும் ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, வவுனியா வடக்கு திரிவச்சகுளம் பகுதியிலும் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலும் இடம்பெற்ற காடழிப்புகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமைச்சரவை அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், பல மாவட்டங்களிலிருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குழுவின் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில், குறித்த காணிகளை இந்த ஆண்டுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
