இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டொலர் இராணுவ நிதியுதவியை 2026ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நிறுத்துவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியில் வலுவான நாடாக வளர்ச்சியடைந்துள்ளதால், அதற்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான நிதியுதவி அவசியமில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த உதவியை நிறுத்தும் யோசனையை நெதன்யாகுவே முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முடிவால் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்படாது என்றும், எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு உதவி தேவைப்பட்டால் அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், இஸ்ரேல் வழக்கம்போல் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ உதவி ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டு வரை நடைமுறையில் உள்ளது. எனவே, 2026ஆம் ஆண்டின் இறுதியில் நிதியுதவியை நிறுத்துவது தொடர்பான நடைமுறை மற்றும் ஒப்பந்த மாற்றங்கள் குறித்து இன்னும் தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. ட்ரம்பின் அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் உடனடி பதில் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
