இலங்கையின் மீன்பிடித் துறையின் ஊடாக அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரித்து, ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதித் துறை முன்னேற்றங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கை 6,888.9 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், முன்னர் 285 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட மீன் ஏற்றுமதி வருமானம் தற்போது 315 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வருமானத்தை 2030ஆம் ஆண்டளவில் 600 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இதற்காக மீன்பிடி வளங்களை முறையாகப் பயன்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் சர்வதேச ஏற்றுமதிச் சந்தைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மயிலத்தமடு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மகாவலி அதிகாரசபை, காணி மற்றும் வனத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து அமைச்சர் லால் காந்த தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும், இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கு இடமளிக்காமல் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதியுடன் செயற்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
