எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி கடந்த புதன்கிழமை (03) சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான – பின்னியர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், நேற்று முன்தினம் (3) பிற்பகல் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், கோட்டை- மாதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ‘கியூ.ஆர்’ குறியீடு இன்றி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார்.
இதன்போது, அங்கிருந்த ஊழியர் ‘கியூ.ஆர்’ குறியீடு இல்லாமல் எரிபொருளை வழங்க முடியாது என மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், ஊழியர் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தாக்குதலை நடத்திய சந்தேகநபருக்குப் பொலிஸாரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட ஊழியர் தனது மேலதிக வாக்குமூலத்தின் மூலம் இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு, வழக்கைக் கைவிட்டுள்ளார்.
