குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு முதன்முறையாக கருத்துத் தெரிவித்த முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, தனது கணவர் எந்தக் குற்றத்திலும் தொடர்பற்றவர் என்றும், அவர் அநியாயமாக “பலிகடா” ஆக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்து வெளியிட்ட அவர், பல தசாப்தங்களாக நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு அரச அதிகாரி மனிதாபிமானமற்ற மற்றும் அநீதியான முறையில் நடத்தப்படுவது குறித்து கடும் ஏமாற்றம் அடைவதாக கூறினார். தனது கணவர் எந்தத் தவறும் செய்யாத நிலையில் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும், தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயமான நடத்தைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுரேஷ் சாலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மனோரி சாலே தெரிவித்தார். குடும்ப உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்திய போதிலும், தாம் குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சுரேஷ் சாலே 38 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவையாற்றியவர் என்றும், தேசியப் பொறுப்புகளுக்காக தனது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையையே பலமுறை புறக்கணித்தவர் என்றும் அவர் நினைவுகூர்ந்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான கடமைகளின் காரணமாக, தனது பிள்ளைகளின் பாடசாலை நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க முடியாத சூழல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவரது உடல்நிலை மோசமடையக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய மனோரி சாலே, நிலைமை மேலும் கவலைக்கிடமாக மாறுவதற்கு முன்பு அவரை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். தற்போதைய மனநிலையிலும் உண்ணாவிரதத்தில் தொடரும் உறுதியிலும் இருக்கும் அவர், தாமாகவே மருத்துவ உதவியை நாட வாய்ப்பில்லை என்பதால், அவரது நலனைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
