மேற்கு மற்றும் ஆயுர்வேத மருத்துவராக தன்னை அறிமுகப்படுத்தி சுமார் 6 கோடி ரூபாவை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய பெண் ஒருவரை ஹொரணை பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.
கிரிபாவ பகுதியில் வசித்து பின்னர் ஹொரணை வீட்டுத்திட்டம் ஒன்றில் தங்கியிருந்த குறித்த பெண், நீண்டகாலமாக இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு எடுத்து அவற்றில் மருத்துவ அடையாளங்களை காட்சிப்படுத்தியதுடன், பல பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளிலிருந்து விசேட மருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, நோயாளிகளுக்கு இலங்கையில் அனுமதிக்கப்படாத தரமற்ற மருந்துகளை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகக் கூறி அவற்றை விடுவிக்க பணம் தேவைப்படுவதாக தெரிவித்து, ஒன்றரை ஆண்டுகளில் பலரிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கம்பஹா, மடுராவளை, மில்லனிய, பண்டாரகம, ஹொரணை மற்றும் இங்கிரிய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி, பல முக்கிய விகாரைகளின் பிரதம பிக்குகளிடமிருந்தும் பணம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இலங்கை மருத்துவ சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சபையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண் எந்த அமைப்பிலும் பதிவு செய்யப்படாதவர் என்பதும், மருத்துவராக போலியாக செயற்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் பெயரில் இரண்டு போலி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், மோசடி மூலம் பெற்ற பணம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
