தம்புள்ளையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய ‘A’ மற்றும் இலங்கை ‘A’ அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
இந்த போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் திலக் வர்மா, இந்த தொடர் தமக்கு வழங்கிய அனுபவங்கள் மற்றும் இறுதிப்போட்டிக்கான உத்திகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு அணித்தலைவராக, இந்த தொடர் அழுத்தமான சூழ்நிலைகளைக் கையாள்வது குறித்து எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது.
பல போட்டிகள் இறுதிவரை மிகவும் நெருக்கமாகச் சென்றன.
சில போட்டிகளில் மழை குறுக்கிட்டு DLS முறை பயன்படுத்தப்பட்டது.
இத்தகைய இக்கட்டான சூழல்களிலும் நாங்கள் பதற்றமடையாமல், அணிக்குத் தேவையான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டோம் என திலக் வர்மா குறிப்பிட்டார்.
இலங்கை ‘A’ அணியின் தொடக்க வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஜோடியின் வலுவான ஆட்டத்தைச் சுட்டிக்காட்டிய திலக் வர்மா, அவர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார்.
இலங்கையின் தொடக்க ஜோடியை ஆரம்பத்திலேயே வீழ்த்தி, அவர்களை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்துவதே இந்திய அணியின் முக்கிய இலக்காகும்.
இறுதிப்போட்டி பெரிய ஆட்டமாக இருந்தாலும், தொடரின் முதல் நாளிலிருந்து பின்பற்றிய அதே அடிப்படை உத்திகளையே நாளையும் தொடரவுள்ளதாக அவர் கூறினார்.
