கண்டி – குண்டசாலை, வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் மரணித்த இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 23 வயதுடைய திருமணமான இளம் பெண்ணாவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவன் வீட்டிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அவளைத் தாக்கி கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், தான் இசைக் கச்சேரி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்று இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டதாகவும், பின்னர் கயிற்றை அறுத்து அவளது உடலை கட்டிலில் கிடத்தியதாகவும் அவளது கணவர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் திருமணமாகி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான கணவர் தனக்குத் தொடர்ச்சியாக ஏற்படுத்திய சித்திரவதைகள் தொடர்பில் பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடு செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கணவர் தன்னை அடிக்கடி தாக்குவதாகக் கூறி குறித்த பெண் தனது பெற்றோரின் வீட்டிற்கு வருவதாகவும், விவாகரத்து செய்யத் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
