நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மோசடி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் உத்தியோகபூர்வமாக சாட்சி கோரல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தினசரி பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை இடம்பெறும். இதுவரையில் 60 பேரிடமிருந்து கூற்றுக்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குழுவுக்கு அழைக்கவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பந்துலசேன குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான கிஹான் குலதுங்க, ஆதித்ய படபெந்தி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சஞ்ஜீவ சோமரத்ன ஆகியோரை உள்ளடக்கிய வகையில் மூவரடங்கிய பூரண அதிகாரமிக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து முழுமையான அறிக்கையை முன்வைப்பதற்கு முறைப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக சாட்சியாளர்கள் அழைக்கப்படவுள்ளார்கள்.
