நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் காலி வரையிலான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை – புத்தளம் மற்றும் மாத்தறை – பொத்துவில் வரையான கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
