அமெரிக்க அணியின் முன்னணி வீரர் ஃபோலரின் பலோகனின் ஒரு போட்டி இடைநீக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி, உலகக் கிண்ண காலிறுதிக்கு முந்தைய (Round of 16) போட்டியில் விளையாட அனுமதித்த பிஃபாவின் முடிவுக்கு பெல்ஜியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற பலோகன், பெல்ஜியத்துக்கு எதிரான நாக்அவுட் போட்டியில் விளையாட முடியாது என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பிஃபா ஒழுங்கு விதிமுறைகளின் 27ஆம் பிரிவின் கீழ், அவரது ஒரு போட்டி இடைநீக்கத்தை ஓராண்டு நன்னடத்தை காலத்திற்கு ஒத்திவைத்ததால், அவர் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இந்த முடிவு போட்டித் தண்டனை விதிமுறைகளுக்கு முரணானது எனக் கூறிய பெல்ஜிய கால்பந்து சம்மேளனம், நியாயமான போட்டித் தன்மையைப் பாதுகாக்கவும் விதிமுறைகள் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, “ஒரு பெரிய அநீதியை FIFA திருத்தியுள்ளது” எனக் கூறி அந்த முடிவை வரவேற்றதையடுத்து, இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக் கிண்ணத்தில் மூன்று கோல்கள் அடித்துள்ள பலோகன், தற்போது பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார்.
