இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 34,268 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இது நாட்டின் மொத்த பாதிப்பில் 52.69 சதவீதமாகும்.
மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 13,322 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 11,347 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 38 சதவீதம் பதிவாகியுள்ளது.
மாதாந்த தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,539 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூலை 8ஆம் திகதி வரை 9,654 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், மாத்தறை (4,600), களுத்துறை (4,354), கண்டி (3,767), காலி (3,767) மற்றும் இரத்தினபுரி (3,766) ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டு டெங்கு காரணமாக 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கண்காணிப்பின் 27ஆவது வாரத்தில் 175 உயர் அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வாராந்தம் சராசரியாக 2,677 புதிய நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
