நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5, 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதலினால், சிறைச்சாலை வளாகம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கைதிகளை அங்கு தடுத்து வைப்பது பொருத்தமற்றது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சிறைச்சாலை வளாகத்தை மீளக் கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி மற்றும் கைதிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களைத் தங்குவதற்கு ஏற்ற மேலதிக இடவசதிகள் அவசியமாகியுள்ளன.
இதற்கமைய, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலை வளாகம்,பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிகச் சிறைச்சாலைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தற்காலிக ஏற்பாடுகள், கைதிகளின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் நிர்வாகச் செயற்பாடுகளைச் சீராகப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
