கிளிநொச்சி – கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் சந்தேகநபர்களான முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கிற்கான குற்றப் பகிர்வு பத்திரங்களை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கின் இரண்டு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04-ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
